திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியபட்டி அருகே பாறைகுளம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள சாலையோரத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் இவர்களுக்கு மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் இதுவரை செய்து கொடுக்கவில்லை. எனவே, தங்களது குழந்தைகளின் கல்வி தேவைக்களுக்காவது மின்சார வசதி செய்து தரும்படி இவர்கள் மாவட்ட அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த முத்தையா, "திண்டுக்கல் ரயில் நிலையம் பகுதியில் இதற்கு முன்பு வசித்து வந்தோம். அங்கு சாலை விரிவாக்கப் பணிக்காக எங்களை அலுவலர்கள் காலி செய்ய வலியுறுத்தினார்கள்.
தற்போது பாறைகுளம் பகுதிக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு இந்த முகவரியில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொடுத்தனர். ஆனால், அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை செய்து தரவில்லை. இப்போது அலுவலர்கள் வந்து இந்த இடத்தையும் காலி செய்ய கூறுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி பேசுகையில், "இப்பகுதியில் உள்ள மலையைத் தான் நம்பி வாழ்கிறோம். அங்குள்ள மூங்கில்களை உடைத்து கூடைப் பின்னி வியாபாரம் செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது மூன்று என கூடை வியாபாரம் நடக்கும். ரேசன் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை ஓடுகிறது. எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. எங்களை இங்கிருந்து வெளியேற அலுவலர்கள் கூறுகின்றனர். அப்படிப்போனால், எங்கள் பிழைப்புக்கு என்ன வழி என்பது தெரியவில்லை. எனவே, மின்சாரம், தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும்" என்றார்.
மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் விளக்கம் கேட்டதற்கு, அவர் உரிய பதிலளிக்கவில்லை.
இதையும் படிங்க: கருவேல மரக் காடுகளின் நடுவே மின்சாரம் இல்லாமல் வசித்துவரும் கிராம மக்கள்: உதவி செய்யுமா அரசு?