கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வேலையிழந்து உணவிற்காக தவித்துவரும் மக்களுக்கு உதவும்வகையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு முடியும்வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூ மார்க்கெட்டில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இந்த திட்டத்தினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவினைப் பெற வந்திருந்த மக்கள் அனைவரும் கும்பலாக கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். மேலும், அரசின் திட்டங்களையும், மக்களின் நலன் காக்க தகுந்த இடைவெளியை வலியுறுத்தவேண்டிய அமைச்சரும் அதனைப் பின்பற்றாமல் தன்னைச் சுற்றி கூட்டம் சேர்த்து இருந்துள்ளார். அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதும் தகுந்த இடைவெளியினைக் கடைபிடிக்கவில்லை.