திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி தாளாளர் பி.ஜோதிமுருகன் மீது, அங்கு படித்த மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதுதொடர்பாக தாடிக்கொம்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி, ஜோதிமுருகன் சரணடைந்தார்.
டிசம்பரில் பிணை: தொடர்ந்து, நவம்பர் 29ஆம் தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிமுருகன், பழனி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜோதிமுருகன் தரப்பில் பிணை வழங்க கோரி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டதை அடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
மார்ச்சில் பிணை ரத்து: அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தங்களையும் சேர்த்து விசாரிக்க கோரி மாதர் சங்கத்தினர் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து, கடந்த மார்ச் 22ஆம் தேதி உத்தரவிட்டது.