நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு; திண்டுக்கல்லில் நடந்தது என்ன? திண்டுக்கல்: சிறுமலையில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் காரைக்குடியைச் சேர்ந்த தனபால் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது விவசாய நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கர் நிலத்தை நெல்லூர் பகுதியைச்சேர்ந்த கருப்பையா என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
தனபால் விற்பனை செய்த ஐந்து ஏக்கர் நிலம், அளவு குறைவாக இருப்பதாகக் கூறி கருப்பையா மற்றும் ராஜாகண்ணு என்ற இருவரும் தனபாலிடம் குறைவாக உள்ள இடத்திற்கு பணத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தனபால் தான் வைத்திருந்த பரலி துப்பாக்கியால் முதலில் கருப்பையாவை வயிறு மற்றும் தொடைப் பகுதியில் சுட்டுள்ளார்.
கருப்பையாவை காப்பாற்ற முயன்ற ராஜாகண்ணுவிற்கும் துப்பாக்கி சூடு ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கருப்பையா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காயமடைந்த ராஜாகண்ணுவிற்கு சிறுமலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் துப்பாக்கியால் சுட்ட தனபால் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் அபார வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்