திண்டுக்கல்: ஆத்தூர் சாலை புதூரைச் சேர்ந்த முகமது இதிரிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். அவர் தனது வீட்டோடு மளிகைக் கடையொன்றையும் வைத்திருந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 37 ஆண்டுகளாகக் குடியிருந்து, மளிகைக்கடை நடத்திவருகிறேன். எனக்கு முகமது பார்க்கர் என்ற அண்ணனும், காத்தூன் பீவி என்ற அக்காவும், சகர்பான் பிவி என்ற தங்கையும் உள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நான் எனது மளிகைக் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது சகர்பான் பீவி, ஹவ்வாம்மாள், சபியம்மாள் மற்றும் செயினம்சுகரா ஆகியோர் காரில் வந்தனர். மேற்படி நான்கு நபர்களும் பக்கத்துக் கடைக்காரரான பாண்டியராஜாவின் தூண்டுதலின்பேரில் திபுதிபுவென அத்துமீறி எனது கடைக்குள் புகுந்தனர்.
அநாகரிகமாக நடந்துகொண்டார்கள்
நான் அப்போது பாண்டியராஜனைப் பார்த்து எதற்காக கடைக்குள் வருகிறீர்கள் என்று கேட்டேன். அப்பொழுது பாண்டியராஜன் என்னைப் பார்த்து, ஆபாசமாகத் திட்டினார். மேற்படி ஐந்து நபர்களும் அத்துமீறி எனது வீட்டிற்குள்ளிருந்த எனது மனைவி நிஷாபேகத்தை அடித்து உதைத்தனர். என்னை அடித்து சட்டையைப் பிடித்து வெளியே தள்ளினர். பின்பு எனது கடையில் இருந்த பொருள்களை அடித்து, நொறுக்கிச் சேதப்படுத்தினர்.