சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவகவுண்டம்பட்டியை சேர்ந்த நாகேஷின் மகளான திருமணமான பெண், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இவரை குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் திண்டுக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் மகள் கிடைக்காததால் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ஆட்கொணர்வு மனுவை நாகேஷ் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே மாயமான தனது மகளை உறவினர்களின் உதவியுடன், சென்னை தேனாம்பேட்டை சி.ஐ.டி காலனியில் தாமரைச்செல்வன் என்ற நபருடன் தங்கியிருந்த போது கண்டுபிடித்து நாகேஷ் திண்டுக்கல்லிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில், தாமரைச்செல்வன் கோவகவுண்டம்பட்டிக்குள் வாடகைக் காரில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட பெண்ணின் உறவினர்கள் அவரை மடக்கி தாக்கத் தொடங்கினர்.