திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலைமை மருத்துவமனையாக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. கொடைக்கானலைச் சுற்றியுள்ள மக்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையே பயன்படுத்தி வருகிறா்கள். நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தாலும், அவசர சிகிச்சைக்காக தலைமை மருத்துவமனைக்கே மக்கள் வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக பிரசவத்திற்கு இங்கு வரும் பெண்கள் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், தீவிர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளித்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மலையில் இருந்து தரைப்பகுதிக்கு 60 கி.மீ தொலைவு என்பதால், சிலர் வழியிலே உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் செயல்படாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், நவீன படுக்கை வசதிகள், போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.