திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அடுத்த குடகிப்பட்டி மணப்புலிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிகா(23). இவரின் இரண்டாவது பிரசவத்திற்காக நேற்று 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் முதல் பிரசவம் திண்டுக்கல்லில் நடைபெற்றதால் அங்கே அழைத்துச் செல்ல ஜோதிகாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் அந்த ஊழியர்கள் செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
இன்று காலை 8.30 மணிக்கு செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் மருத்துவர்கள் மட்டுமே இருந்ததால் மதியம் 12.15 மணி வரை பிரசவம் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேரம் கடந்துபோகவே வேறு வழியில்லாததால் ஆண் மருத்துவர் பிரசவம் பார்க்க முயன்றுள்ளார். ஆனால் அப்போது ஜோதிகாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது.
இதனையடுத்து, அவரை அரசு மருத்துவனைக்கு அழைத்து செல்லுமாறு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிரவசத்தில் ஜோதிகாவும், குழந்தையும் இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜோதிகாவின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தை ஜோதிகாவின் உறவினர்கள் 250க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மருத்துவர்கள் சந்தோஷ், கபிலன், விக்னேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு வந்த வட்டார மருத்துவ ஆய்வாளர் ஷேக் அப்துல்லா, வட்டார மேற்பார்வையாளர் மகாராஜன், நத்தம் காவல் ஆய்வாளர் சேகர், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்க்காததால், தாயும்-குழந்தையும் உயிரிழப்பு!