திண்டுக்கல்:தமிழ்நாட்டின் வனப்பரப்பு தற்போது 22.71 சதவீதம் உள்ளது. இதனை அடுத்த பத்து ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை சார்பில் 10,000 குறுங்காடுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை தவிர்க்கவும் ஜப்பான் சுற்றுச்சூழல் ஆர்வலர் அறிமுகப்படுத்திய ‘மியாவாக்கி காடுகள்’ எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கி திண்டுக்கல் மாவட்டம் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரி வளாகம், பொன்னிமாந்துரை பகுதியில் குறுங்காடுகள் வளர்க்கப்பட்டுள்ளது.
குறுகிய இடத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடுவதன் மூலம் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட இடையகோட்டை கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம், சீமைகருவேல மரங்களால் புதர் மண்டி காணப்பட்டது.
இந்த இடத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏவும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி தேர்வு செய்தார். இதனையடுத்து 117 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்யும் பணி முடிவடைந்தது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக மரக்கன்றுகளை நடுவதற்கு குழி தோண்டும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.