திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சியின் சார்பாக பயணிகள் நிழற்குடை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மலைப்பகுதியான கொடைக்கானலில் அடிக்கடி காலநிலை மாறுபடும். மழை, காற்று, வெயில் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நிழற்குடை அருகே பேருந்துகளுக்கு காத்திருக்க அந்த நிழற்குடை வசதியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினரால் மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதோடு சேர்த்து பயணிகள் நிழற்குடையும் அகற்றப்பட்டது. இதனால் நகரின் முக்கியச் சந்திப்பில் உள்ள மூஞ்சிக்கல் பகுதியில் பேருந்திற்கு காத்திருக்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளும் மழை, குளிர், வெயில் நேரங்களில் பாதுகாப்பாக நிற்பதற்கு இடமின்றி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் தற்போது மழைக்காலம் என்பதால் மக்கள் மழையில் நனைந்தபடி பேருந்துகளுக்கு காத்திருக்கின்றனர்.