திண்டுக்கல்: நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச்சேர்ந்தவர் கோபி, இவர் திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமயந்தி (42) தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீக சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. சொத்துப் பிரச்னை தொடர்பாக வழக்குரைஞரை சந்திப்பதற்காக தமயந்தி திண்டுக்கல்லுக்கு வியாழக்கிழமை புறப்பட்டார்.
உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்தில் தமயந்தி ஏறுவதைப் பார்த்து, அதே பேருந்தில் ராஜாங்கமும் தனது 14 வயது மகனுடன் ஏறினார். அந்தப் பேருந்து கோபால்பட்டி அடுத்துள்ள வடுகப்பட்டி அருகே வந்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியை ராஜாங்கம் வெட்டினார். பின்னர் ராஜாங்கம் அவரது மகனை விட்டுவிட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று தமயந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.