திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேவுள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கிவருகிறது.
இந்தக் குவாரியில் அரசு நிர்ணயித்த ஆழத்தை விட அதிபயங்கர வெடிகள் வைத்து அதிகப்படியாக ஆழம் தோண்டி கற்கல் வெட்டி எடுக்கபடுகிறது. இதனால், அதனருகே இருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், சுற்றுப் பகுதியில் கிணற்று பகுதியில் நீர்ப்பிடிப்பு குறைந்து விவசாயம் பொய்த்துப் போய் விட்டதாகவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் மாவட்ட கனிமவள துறை அலுவலர்கள், குஜிலியம்பாறை வட்டாட்சியர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் சம்பவ இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த லாரி, கற்களை உடைக்க பயன்படுத்திய ராட்சத இயந்திரம் என இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள், கடந்த 30 ஆண்டு காலமாக பயன்படுத்தி வரும் கிராம பகுதிகளை ஆக்கிரமித்துள்ள குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.