திண்டுக்கல்:நிலக்கோட்டை அருகே பாய், போர்வை, கட்டில் போன்றவற்றுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்களால் சற்று நேரத்திற்கு அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டிபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்கக் கூடாது என கிராம மக்கள் அனைவரும் திரண்டு, அரசு கள்ளர் பள்ளி வளாகப் பகுதியில் தூங்கும் போராட்டம் என்று நூதன முறையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் அரசு கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்கக் கூடாது என வலியுறுத்தி நேற்று (ஜூன்15) கிராம மக்கள் அனைவரும் திரண்டு பள்ளி வளாகத்திற்குள் தூங்கப் போவதாக அறிவிப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த நூதன போராட்டத்திற்காக அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.
அதன்படி நேற்று மாலை கிராம மக்கள் ஒன்று திரண்டு அங்கு உள்ள காளி, பகவதி அம்மன் கோயில் முன்பு கட்டில், பாய், போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட பொருளோடு ‘தமிழக அரசே, தமிழக அரசே, இணைக்காதே இணைக்காதே, அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்காதே’ என பல்வேறு கோஷங்களும் முழக்கங்களுமிட்டு, கிராமம் முழுவதும் பேரணியாகச் சென்று அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முன்பு சென்றனர்.