நாமக்கல் நகராட்சி கோட்டைப்பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் சிலர், மது அருந்தி விட்டு, அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று இலவசமாக சிகரெட் கேட்டுள்ளனர். அதற்குக் கடை உரிமையாளர் பணம் கேட்ட நிலையில், இளைஞர்கள் பணம் தர மறுத்து, கடையிலிருந்த முட்டைகள், குளிர்பானப் பாட்டில்கள் மற்றும் மளிகைப் பொருட்களை எடுத்து உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள், நாமக்கல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவல் துறையினர், தப்பியோடிய இளைஞர்களை அப்பகுதி முழுவதும் தேடி, வீடுகளில் பதுங்கியிருந்த இமானுவேல், செல்லா உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து இளைஞர்களும், மது அருந்தி விட்டு, அப்பகுதியில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதையும் படிங்க: ஊரடங்கை தளர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!