திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று (ஜன.04) வருகை தந்தார். பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி நிலையத்திற்கு வருகை தந்த ஆளுநர் இல.கணேசனுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் இல.கணேசன் தெரிவித்ததாவது, "சுதந்திரப் போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் ஆகியோர் தொடர்பான விழாவில் பங்கெடுக்க மதுரை வந்தேன். அதனைத் தொடர்ந்து, கோவையில் நடைபெறும் உலகளாவிய தமிழர்கள் மாநாடு நிகழ்ச்சியில் பங்கெடுக்கச் சாலை மார்க்கமாக செல்லும் வழியில் பழனி முருகனை தரிசிக்க வந்தேன்" என்று தெரிவித்தார்.