திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நூற்பாலைகள் இயக்கப்படவில்லை. இதனால் வேலையின்றி தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களிலேயே தங்கியிருந்தனர். இதனிடையே நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வடமதுரையிலுள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து வரும் ஒடிசா, மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 நூற்பாலை தொழிலாளர்கள் நேற்றிரவு தாங்கள் பணிபுரிந்த மில்லிலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் வடமதுரை ரயில் தண்டவாள பாதை வழியாக திண்டுக்கல் வரை 15 கிமீ நடந்து வந்துள்ளனர். ஆனால் ரயில் நிலையம் செல்வதற்கான வழி தெரியாமல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களைக் காவல் துறையினர் அழைத்து விசாரித்தபோது, தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக ரயில் நிலையத்தைத் தேடி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய தொழிலாளர்கள், "நாங்கள் அனைவரும் வட மதுரையிலுள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறோம். நேற்று பிகார் மாநிலத்திற்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதையறிந்து இன்று ஏதேனும் ரயில் இயக்கப்பட்டால், அதில் ஏறி சொந்த ஊர்களுக்குச் சென்று விடலாம் என எண்ணி வந்தோம். ஆனால் எங்களுக்கு ரயில் நிலையத்திற்கான வழி தெரியவில்லை. அதனால் தவறுதலாகப் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டோம்" என்று கூறினர்.