திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது, பொம்மனங்கோட்டை கிராமம். இங்கு வசித்து வரும் சுமார் 120க்கும் மேற்பட்ட பெண்கள், தொடர்ந்து 20ஆவது ஆண்டாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து, இருமுடி கட்டி செல்கின்றனர். இந்த நிலையில், ஒட்டன்சத்திரத்தில் ஜேபிஎஸ் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சுற்றுலா பேருந்தை பயணத்துக்காக பேசியுள்ளனர்.
மேலும் 2 பேருந்துக்கும் சேர்த்து ரூ.1,40,000 வாடகையாக பேசப்பட்டுள்ளது. இதில் பாதி பணத்தை சுற்றுலா பேருந்து உரிமையாளர் முன்பணமாக பெற்றுள்ளார். பின்னர் மீதமுள்ள தொகையும் உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2 பேருந்துகள் பேசப்பட்ட நிலையில், ஒரு பேருந்து காலதாமதமாக வந்துள்ளது.
அதேநேரம் மற்றொரு பேருந்து வேறொரு கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விசாரிக்கையில், ஒரே பேருந்தை இரண்டு கிராமத்துக்கு அனுப்பியதும், இரண்டு கிராமத்தினரிடம் இருந்தும் தனித்தனியாக பணத்தை பெற்றுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது.