திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்சமாக நேற்று(ஜூலை 26) ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,318 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்று காரணமாக 35 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கிருமிநாசினி அளிக்கப்படுவதில்லை. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வருகை அதிகரித்துள்ள சூழலில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் இதனை முறைப்படுத்த வேண்டும். மேலும் நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வெளியில் வராமல் தடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான தரமான உணவு, குடிநீர், சுத்தமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். குறிப்பாக கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி நேரில் மனு அளித்தார்.