நடைபாதையை மீட்டுத் தரக்கோரி மலைவாழ் மக்கள் மனு - மலைவாழ் மக்கள் மனு
திண்டுக்கல்: பொதுப் பயன்பாட்டில் இருந்த நடைபாதையை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மலைவாழ் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் வடகவுஞ்சி கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடமன்ரேவு பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு கோம்பை காட்டிலிருந்து 38 ஓடை வழியாக வெத்தல காடு செல்லும் பாதையில் நிலம் வைத்துள்ள விவசாயிகள், விவசாய நிலங்களுக்குச் செல்லக்கூடிய வழியை மறித்து வைத்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நடைபாதையை தற்போது தர்மகிருஷ்ணன் என்பவர் அடைத்து வைத்துக்கொண்டு பிரச்னை செய்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் யாரும் நடக்க கூடாது என மிரட்டி பிரச்னை செய்து வருவதன் மூலம் தங்களது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக மலைகிராம மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டபோது, இப்பகுதி நடைபாதை என காட்டவில்லை. அதனால் நீங்கள் இந்தப் பாதையை பயன்படுத்த முடியாது எனக் கூறினர். ஆனால் இந்த பாதை இல்லாவிட்டால் எங்கள் விவசாய நிலங்களுக்கு நாங்கள் செல்லமுடியாது என்கின்றனர்.
எனவே தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை திரும்ப திறந்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் விவசாய நிலங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி சென்று வர மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் என்று கூறினர்.