திண்டுக்கல்: உலகளாவிய சுற்றுலா தளமாக விளங்கும் கொடைக்கானலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகை புரிகிறார்கள். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும், போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கான சான்றாக வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில், இங்கு போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள், பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று, அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய ’போதை காளான்’ என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் இயற்கையாக வளர்ந்து வருகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கும் மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதை காளானும் ஒரு வகையாகும்.