திண்டுக்கல்: காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறி, மூன்று மாதங்கள் ஆகியும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான தடை தொடர்வதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தொடர் விடுமுறையை அடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துக் காணப்படுகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பிரதான சுற்றுலாப் பகுதிகளாக இருக்கக்கூடிய மோயர் சதுக்கம், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களைக் கண்டு ரசிப்பது வழக்கம். அதேபோல், இங்குள்ள முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான பேரிஜம் ஏரிக்குச் சென்றும், தங்களின் இனிமையான நேரங்களைச் செலவிடுவர்.
இந்த பேரிஜம் ஏரி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. ஆகையால், அங்கு செல்வதற்கு வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். மேலும், பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட பல பகுதிகளைக் காணலாம். இந்நிலையில், இந்த பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் போதெல்லாம், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படும்.