திண்டுக்கல்:அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (அக்.30) மாலை நடைபெற்றது.
பிற்பகல் நேரத்தில் மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படைசூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார்.