திண்டுக்கல்: இது குறித்து பாலபாரதி இன்று (டிசம்பர் 9) செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டுவரும் சுரபி கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக, அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போக்சோ சட்டத்தில் தேடப்பட்டுவந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு 11 நாள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவருக்குப் பிணை அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் பிணை அளிக்கப்பட்டதால், அகில இந்திய மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகாத சொற்களால் பேசிய வழக்கறிஞர்
அப்போது தெய்வேந்திரன், கண்டன உரை பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கீடு செய்து கேள்விகேட்டதும், தகாத சொற்களால் பேசியதால் கோபமடைந்த மாதர் சங்கத்தினர் வழக்கறிஞரைத் துரத்தியுள்ளனர். தாடிகொம்பு காவல் நிலையத்தில் மாதர் சங்கத்தின் மீது வழக்கறிஞர் தெய்வேந்திரன் பிணையில் வரமுடியாத அளவிற்கு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கறிஞர் தெய்வேந்திரன் மீது வடமதுரை காவல் நிலையத்தில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. மேலும் வடமதுரையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்.
அந்தக் கொலையின் எதிரிகளுக்கும் அவர்தான் வாதாடியுள்ளார். எனவே குழந்தைகளுக்கு எதிராக வாதாடும் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவசர அவசரமாக காவல் துறை வழக்குத் தொடுத்துள்ளது.
இதில் வழக்கறிஞர்கள் யாரும் போராடவில்லை. திண்டுக்கல் பார் கவுன்சில் ஜனநாயக முறையில் நடந்துகொண்டிருக்கிறது. பாஜகவின் வழக்கறிஞர்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் எஸ்பியே நேரடியாகக் கலந்துகொண்டு சமாதானப்படுத்துகிறார். அதற்கு என்ன அவசியம் வந்தது. அந்தச் செயல் எங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.