தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’குடியுரிமை சட்டத்தை வைத்து எதிர் சித்தாந்தவாதிகளை பழி தீர்க்க பாஜக நினைக்கிறது’ - கரு. பழனியப்பன் - குடியுரிமைச் சட்டம்

திண்டுக்கல்: பாஜகவின் சித்தாந்தமான ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கோஷம் என்கிற இலக்கை நாம் தனித்தனியே எதிர்கொள்வதைவிட ஒன்றிணைந்து ஒற்றுமையாய் போராடி விரட்டியடிக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

caa
caa

By

Published : Mar 17, 2020, 1:00 PM IST

திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் இந்திய குடியுரிமையைப் பாதுகாக்க பொதுமக்கள் கூடுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தலைமை ஏற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை பேராயர் அந்தோணி பாப்புசாமி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இந்தியக் குடியுரிமைச் சட்டம் எவ்வாறு தனது குடிமக்களுக்கு பாதுகாப்பை அளித்துள்ளது என்றும், அதனை குடியுரிமை திருத்தச் சட்டம் எவ்வாறு பறிக்கிறது என்றும் விளக்கிப் பேசப்பட்டது.

இதில் பேசிய பேராயர் அந்தோணி பாப்புசாமி, ” குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய வகையில் உள்ளது. இது இஸ்லாமுக்குதானே வந்தது என்று ஒதுங்கி நிற்கக் கூடாது. இன்று இஸ்லாமுக்கு, நாளை கிறிஸ்தவத்திற்கு. இதுதான் இவர்களது திட்டம்.

ஒரு நாட்டின் அனைத்து அடையாள அட்டைகளையும் வைத்துள்ள ஒருவரை சட்டவிரோதக் குடியேறிகள் எனக்கூறுவதை எந்த வகையில் ஏற்க முடியும். நம்மில் பலருக்கு நம்முடைய பிறந்த இடம் மற்றும் தேதியே தெரிவதில்லை. அப்படியான சூழலில் நம்முடைய பெற்றோரின் பிறப்பு குறித்த தகவல்களை எத்தனை பேரால் நினைவில் வைத்திருக்க முடியும். இந்தியாவின் அழகே வேற்றுமையில் ஒற்றுமைதான். அந்த அடையாளத்தை நாம் இழக்காமல் இருப்பதே சிறந்தது ” என்று கூறினார்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், ” பாஜகவின் சித்தாந்தம் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கோஷம், அது ஜெய் ஸ்ரீ ராம். இந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கான பகடைதான் குடியுரிமை திருத்தச் சட்டம். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களை பழி தீர்த்து கொள்ள பாஜக நினைக்கிறது. இதை நாம் தனித்தனியே எதிர்கொள்வதைவிட ஒன்றிணைந்து ஒற்றுமையாய் விரட்டியடிக்க வேண்டும்.

’குடியுரிமை சட்டத்தை வைத்து எதிர் சித்தாந்தவாதிகளை பழி தீர்க்க பாஜக நினைக்கிறது’ - கரு. பழனியப்பன்

அதற்கு வீடுகளிலும், குழந்தைகளிடமும் அரசியல் பேச வேண்டும். என் வீட்டில் என் தந்தை அரசியல் பேசியதால்தான் எனக்கு பெரியார் யார், அம்பேத்கர் யார் என்றும் அந்த அரசியல் என்ன என்றும் தெரிந்தது.

அதனால் அறிவு வளர்ந்தது. அதே போல நாமும் நம் குழந்தைகளுக்கு தற்போதைய சூழலில் உள்ள பிரச்னைகளையும், அதிலுள்ள அரசியல் பற்றியும் விளக்க வேண்டும். அதுவே அவர்களை மனிதாபிமானமிக்க சரியான சிந்தனை கொண்ட சுய அறிவுடைய மனிதர்களாக உருவாக்கும் “ என்று கூறினார்.

இதையும் படிங்க:சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராகத் தெலங்கானாவில் தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details