திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுக் காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார், நத்தம் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
'அரசு வழங்காட்டி நாங்க குடிநீர் வழங்குவோம்' - ஐ. பெரியசாமி அதிரடி! - திண்டுக்கல் ஆட்சியர்
திண்டுக்கல்: 'ஒட்டன்சத்திரம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் தீர்க்காவிட்டால் நாங்கள் களத்தில் இறங்கி பைப் லைன் மூலமாக மக்களுக்கு தண்ணீர் வழங்குவோம்' என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பேசிய ஐ. பெரியசாமி, இன்றைய சூழலில் பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து ஒரு குடம் நீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், ஏற்கனவே கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி ஆத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நீர் வழங்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இதே நிலையில் நீடித்தால் குடிநீர் வழங்க நாங்களே நேரடியாக களத்தில் இறங்கி பைப் லைன் போட்டு பணிகளை செய்ய உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.