தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'40 வருஷமா இருக்கோம், எதுவும் மாறலை' - கழிவு நீரால் பாதிக்கப்படும் சாலையோர மக்கள்! - வீட்டுக்குள் புகும் கழிவு நீர்

திண்டுக்கல்: மழை வந்தால் வாழ்வு வளம் பெறும், குளம் குட்டை நிரம்பும், மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால், மழை எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதில்லை. சிறிய மழை வந்தாலே இவர்கள் வீடுகளில் பெருகும் தண்ணீரை வெளியேற்ற பாத்திரங்கள் தேட வேண்டும் என்கின்றனர் சின்னையாபுரம் மக்கள்.

dindigul
dindigul

By

Published : Oct 18, 2020, 6:36 PM IST

Updated : Oct 28, 2020, 6:07 PM IST

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்டது சின்னையாபுரம். இங்கு 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஓடை அருகே வசிப்பதால் மழைக்காலங்களில் நீர் வீட்டுக்குள் புகுவதால் எவ்வாறு மழை காலத்தை சமாளிப்பது என இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டனர்.

கழிவுநீர் ஓடை அருகே குடியிருப்பதால் மழைக்காலம் மட்டுமின்றி, கொசுக்களும் அவர்களது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுத்து வருகிறது. அவ்வப்போது காய்ச்சல், டெங்கு போன்ற பிற நோய்களும் ஏற்படுகிறது.

இது குறித்து ராசம்மா கூறுகையில், "இந்த இடம் 40 வருஷத்து முன்னாடி எப்படி இருந்ததோ, அதேபோன்று தான் இப்போதும் இருக்கிறது. எந்த மாற்றமும் நிகழவில்லை. இப்பகுதியை சுற்றி பெரிய பெரிய மாளிகை வீடுகளும், புதிய கட்டங்களும் வந்துவிட்டன.

ஆனால், இங்கு சாலை வசதி கூட இல்லாமல் தவித்து வருகிறோம். சாதாரண மழை வந்தாலே தண்ணி பெருகி வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சிடும். நல்ல தண்ணியா இருந்தாலும் பரவால கழிவுநீரும் சேர்ந்து வரும்.

மழை வந்தால் தண்ணீர் எப்போ வீட்டுக்குள்ள வரும் என்பதே தெரியாமல் விடிய விடிய தூங்காம கிடப்போம். இதுதொடர்பாக யூனியன் அலுவலகத்தில் சொன்னால், அலுவலர்கள் வந்து பார்ப்பார்கள். ஆனா எந்த நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்" என்றார்.

எங்களுக்கு நடக்கக்கூட ஒரு நல்ல பாதை இல்லை. வேறு பாதை இல்லாததால், இதில் நடக்குறப்போ பெரியவங்க, சின்னவங்க அத்தனை பேரும் தவறி விழுந்து காயமடைந்துள்ளோம். இது போதாதென்று இங்க கொசு தொல்லை வேறு, மலேரியா, டெங்குன்னு மாறி மாறி காய்ச்சல் வந்துட்டே இருக்கு. இத்தனை வருடத்தில் அரசு சார்பில் எந்த சலுகையும் நாங்கள் பெறவில்லை. குடிக்க தண்ணீர் குழாய் கூட போட்டு தரவில்லை. இருந்தாலும் எங்களுக்கு வேற போக்கிடம் இல்லாம போனதால இந்தக் கஷ்டத்திலும் இங்க குடியிருக்கோம்" என சுப்புலட்சுமி தெரிவித்தார்.

ஜெயசீலன் கூறுகையில், "எம்.வி.எம் நகரில் இருந்துவரும் கழிவுநீர் ஓடையின் அகலம் குறுகிவிட்டது. அடிக்கடி தண்ணீர் வீட்டுக்குள் வரும்போது விஷப்பூச்சிகளும் சேர்ந்து வந்துவிடும். இதே நிலை நீடித்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதை சரி செய்யக் கோரி பலமுறை அரசு அலுவலர்களிடம் புகாரளித்தும், அதற்கான நிரந்தர தீர்வு இதுவரை கிடைக்கவில்லை" எனப் புகார் தெரிவித்தார்.

'40 வருஷமா இருக்கோம், எதுவும் மாறலை' - கழிவு நீரால் பாதிக்கப்படும் சாலையோர மக்கள்

இது குறித்து திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் அஜய் கூறுகையில், "இப்பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஓடையில் குப்பை, மண் நிறைந்துள்ளது. அதனை யாரும் சுத்தப்படுத்துவது கிடையாது.

இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையர், மாநகராட்சி அலுவலர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை முறையிட்டுள்ளோம். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேலும் பலர் சிக்குவர்' - அமைச்சர் செல்லூர் ராஜூ

Last Updated : Oct 28, 2020, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details