திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்த பிரியங்காவை காதலிப்பதாக, அந்த மில் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் என்பவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அப்பெண்னை பலமுறை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்ட ரவிக்குமார் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இருப்பினும் அப்பெண்ணின் வற்புறுத்தலையடுத்து சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பாக தாடிக்கொம்பிலுள்ள பெருமாள் கோயிலில் உறவினர்கள் இன்றி ரவிக்குமார் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் தாடிக்கொம்பிலேயே வாடகை வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். திருமணம் ஆனாலும், தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை தன் குடும்பம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறி பலமுறை மனைவியிடம் சண்டை போட்டுள்ளார், ரவிக்குமார். இதனிடையே ஆறு மாதங்களுக்கு முன்பாக வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற ரவிக்குமார், ஆண் குழந்தை பிறந்த போது கூட பார்ப்பதற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியங்கா காவல் துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே ஏமாற்றிச் சென்ற கணவர் ரவிக்குமார், அவரது தந்தை ரெங்கசாமி, தாய் பழனியம்மாள் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண் பிரியங்கா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதையும் படிங்க: குஜராத் கலவர வழக்கு; நீதி நிலைநாட்டப்பட்டது!