இந்து மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த நிர்வாகக் குழுக்கூட்டத்தில் கொடைக்கானல் தொடர்பான இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் உள்ள மக்களின் வாழ்வு ஆதாரம் சுற்றுலாத் தொழிலை மையமாகக் கொண்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் இங்குள்ள மக்களின் வாழ்வு ஆதாரமாக இல்லை.
ஆனால்,மத்திய மாநில அரசுகள் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் வனப் பாதுகாப்புச் சட்டம் , கட்டட வரன்முறைச்சட்டம் தீவிரமாக அமல்படுத்தக்கூடிய காரணத்தினால் சுற்றுலா தொழில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.
அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பும், வளர்ச்சியும் தண்டவாளம் போன்றது. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலும், ஒட்டு மொத்தமாகத் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் பூட்டப்பட்டதால் மக்கள் வாழ்வு ஆதாரத்தினை இழந்து தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகமும், மத்திய, மாநில அரசுகளும் மக்கள் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்த கொடைக்கானல் மக்களின் வாழ்வு ஆதாரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!