திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள சிங்காரக்கோட்டை ஒட்டுப்பட்டி பிரிவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மில் உள்ளது. இந்த மில்லுக்கு தினந்தோறும் வேலையாட்களை வேனில் அழைத்து செல்வது வழக்கம். அதேபோல், 20 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் மில்லுக்கு சென்று கொண்டிருந்தது.
வேனை வத்தலக்குண்டுவை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசு பேருந்து முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், வேனின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. வேனுக்குள் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் ஓட்டுநர் சுரேஷ், வத்தலக்குண்டு தெற்கு தெருவைச் சேர்ந்த சுகுணா (40), வத்தலக்குண்டு அண்ணாநகரைச் சேர்ந்த லதா (35), உசிலம்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் (28) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் ஓடி வந்து வேனுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வத்தலக்குண்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு பேருந்தும் வேனும் மோதி விபத்து பரிதவிக்கும் பயணிகள் மேலும் இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. இது குறித்து தகவலறிந்ததும் பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மில் வேலைக்குச் சென்ற 5 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது மற்ற தொழிலாளர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இமாச்சலில் பயங்கர தீ விபத்து: 4 பேர், பல விலங்குகள் உயிரிழப்பு!