திண்டுக்கல்நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காலை பக்கத்து ஊரான கந்தப்பகோட்டையில் மினி வேனில் மீன் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
மீன் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்னையில், அந்தப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை மீன் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 பேரும் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அதன்பின் காவல் துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கந்தப்பகோட்டையில் தாக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தரப்பில் இருந்து சென்ற நபர்கள் பள்ளபட்டி அருகில் நிறுத்தப்பட்டிருந்த மீன் விற்பனை செய்த மினிவேனின் கண்ணாடியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
திரைப்பட பாணியில் தாக்குதல்:இதனால் ஆத்திரம் தீராத பள்ளப்பட்டியைச் சேர்ந்த மீன் விற்பனை செய்த இளைஞர்கள் மதுரை, வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட கூலிப்படையினருடன் சேர்ந்து திரைப்பட பாணியில் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பட்டாக்கத்தி, வாள், அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருத்தெருவாக சுற்றியதோடு மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கி, சாலையில் நிறுத்தியிருந்த கார் ஆட்டோ 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
பெட்ரோல் குண்டு வீச்சு:தெருவில் நடந்து சென்ற சுமார் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை துரத்தி துரத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசி இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். வீட்டில் இருந்த நபர்களை தாக்க முயற்சித்து கதவுகளை கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர். கால்நடைகள் வளர்க்கும் கால்நடை கூடாரங்கள் உள்ளிட்டவைகளையும் கடுமையாக சேதப்படுத்தி ஆட்டுக்குட்டி ஒன்றையும் வெட்டியுள்ளனர்.
மீன் விற்பனை பிரச்சனையில் கூலிபடையினர் ஊருக்குள் புகுந்து அராஜகம் போலீசார் குவிப்பு! வெட்டுப்பட்டு காயமடைந்த ஐந்து நபர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு திண்டுக்கல் - தேனி சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்தனர். நிலக்கோட்டை டிஎஸ்பி தலைமையிலான சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கிராமத்தைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மீன் விற்கும் சம்பவத்தில் ஏற்பட்ட பிரச்னையில் திரைப்பட பாணியில் ஊருக்குள் புகுந்து சூறையாடிய சம்பவத்தில் ஐந்திற்கு மேற்பட்டோர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற சம்பவங்களை காவல் துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க :இரு தரப்பு மோதல்; காவல் நிலையம் முற்றுகை!