திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோமணம்பட்டி, மூங்கில்பட்டி, கணவாய்ப்பட்டி, கன்னியாபுரம், சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. ஓராண்டு பயிரான கரும்பு தற்போது மகசூல் பருவத்திற்கு வந்துள்ளது. வரும் பொங்கலுக்காக இவை விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.
பொதுவாக மதுரை, திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து கரும்புகளைக் கொள்முதல்செய்வது வழக்கம். டிசம்பர் மாத தொடக்கத்திலேயே விவசாயிகளிடம் முன்தொகை கொடுத்து முன்பதிவு செய்துகொள்வர். விளைநிலங்களில் நேரடியாகக் கரும்புகளை அறுவடை செய்து 10 கரும்பு கொண்ட கட்டுகளாகக் கட்டி வெளியூர்களுக்கு அனுப்பிவைப்பர்.
கடந்த ஆண்டு கரோனா காலகட்டமாக இருந்தாலும் ஒரு டன் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு நியாயவிலைக் கடைகளில் கரும்புகள் வழங்கப்பட்டுவருவதால் ஒரு டன் 4000 ரூபாய் விலைக்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.