கொடைக்கானலில் சட்டவிரோதமாக வீடு கட்டுவதாக பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் மீது புகார் திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (ஆக.22) நடைபெற்றது. வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல்துறை என பலதுறை அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். மேல்மலை மற்றும் கீழ்மலைக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் இதில் பங்கேற்றனர். மலைப்பகுதிகளில் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக பேசிய விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து குற்றம்சாட்டினர்.
மேல்மலை மலைக்கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் செய்தும் கீழ்மலைக்கிராமத்தில் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தெரிவித்தனர். இதனால், விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை கூறினர். தொடர்ந்து, பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன் பேசுகையில், வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டடம் கட்டி வருவதாகவும், மலைக்கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் குற்றம்சாட்டினர்.
ஆக்கிரமிப்பில் ஆடம்பர பங்களா கட்டும் நடிகர்கள்?:இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ், நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டடம் கட்டி வருவதாகவும், மின் இணைப்பு அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி பெறாமலே கட்டடங்கள் கட்டுவதாகும், அரசு அனுமதியை மீறி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலை அமைத்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார். பிரபல நடிகர்கள் மீது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் பிரகாஷ் ராஜின் சர்ச்சை நடவடிக்கைகள்: சந்திரனையில் விக்ரம் லாண்டரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கிண்டல் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சர்ச்சை ஓய்வதற்கு முன்னதாகவே, கொடைக்கானல் பேத்துப்பாறையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கட்டிடங்கள் கட்டி வரும் இடத்திற்கு பொதுப்பாதையில் தனது சொந்த செலவில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளார். தற்போது பாதையில் வேலை முடிந்த நிலையில் அந்தப் பொது பாதையை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று ஆக்கிரமிப்பு செய்து நடிகர் பிரகாஷ்ராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்:பேத்துப்பாறையை சேர்ந்த ஊர் தலைவரும் சமூக ஆர்வலர் மகேந்திரன் கூறியதாவது, 'கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (ஆக.21) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிகளை மீறி, அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. சாதாரண விவசாயிகள் குடிசை அமைத்தால், குச்சி ஊன்றினால் கேள்வி கேட்கும் அதிகாரிகள், நடிகர்கள் அனுமதியின்றி வீடு கட்டுவதை எப்படி அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை.
பாபி சிம்ஹாவின் வீட்டிற்கு சீல் வைக்கவும்; பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை தேவை:இது குறித்து ஊராட்சியில் கேட்டபோது அனுமதி பெறவில்லை என தெரிவித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது பலமுறை எச்சரித்தும் வீடு கட்டி வருகின்றனர் என்று தெரிவித்தனர். நடிகர் பாபி சிம்ஹா, அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் வீடு கட்டி வருகிறார். உடனே அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மின் இணைப்பை துண்டித்து, கட்டடத்துக்கு சீல் வைக்க வேண்டும். நாளை (ஆக.23) நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் டீ ஆற்றுவது போல் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, இந்திய இறையான்மையும், இந்திய மக்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
ஆக்கிரமிப்பு இருப்பின் நிச்சயம் அகற்றப்படும்; கோட்டாட்சியர் உறுதி: இது குறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்ததாவது, 'விவசாய குறைப்பிற்கு கூட்டத்தில் நடிகர்கள் அனுமதியின்றி கட்டடம் கட்டுவதாக விவசாயிகள் தரப்பில் பேசப்பட்டுள்ளது. இது குறித்து நாங்களும் முறையாக நில அளவையர் மற்றும் அரசுத்துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்தப் பிறகுதான், முழுமையாக தகவல் அளிக்கப்படும். மேலும் இந்த புகார் தெரிவிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அந்த ஆக்கிரமிப்புகள் நிச்சயமாக அகற்றப்படும்' எனத் தெரிவித்தார்.