தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையம் முன்பு விவசாயி தற்கொலை; அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன? - திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் காவல்நிலையம் முன் விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார்.

Farmer dies after drinking poison in front of Dindigul Ammainaickanur police station
காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி பலி

By

Published : Feb 9, 2023, 10:15 PM IST

திண்டுக்கல்மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த கொடைரோடு அருகே உள்ள குல்லலகுண்டு ஊராட்சி கன்னிமா நகரைச் சேர்ந்த, பாண்டி என்பவரது மகன் சதீஷ் கண்ணன் (23). இவர் பள்ளப்பட்டி சிப்காட்டில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திற்கு, இவர், கடந்த 13.4.2022அன்று சென்றார்.

அப்போது பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு மற்றும் சிலர் பாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு, ’உன்னை பொய் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடுவோம், உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் செய்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர், பாண்டியும் அவரது சதீஷ் கண்ணனும். இதில், சம்பந்தப்பட்ட நபரின் புகார் மீது விசாரணை செய்ய நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

ஆனால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாததால், ஆத்திரமடைந்த சதீஸ் கண்ணனின் தந்தை விவசாயி பாண்டி (50) என்பவர், கடந்த 7-ம் தேதி இரவு அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சென்று, அங்கு தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத, காவல்துறையினரை கண்டித்து, காவல் நிலைய வாசலில் தான் மறைத்து வைத்து இருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.

உடனடியாக விவசாயி பாண்டி மீட்கப்பட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி பாண்டி இன்று 09.02.2023 அதிகாலை மரணமடைந்தார்.

இந்நிலையில், விவசாயி பாண்டி விஷம் குடித்த அன்று, மேற்படி பாண்டி கொடுத்த புகாருக்கு, 3 பேர் உட்பட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற, பாண்டி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயி பாண்டி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 37 ஆயிரம் ரூபாய் போனுக்கு நான்கரை லட்சம் இழப்பீடா..! குட்டு வைத்த கோர்ட்..

ABOUT THE AUTHOR

...view details