திண்டுக்கல்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்றார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சகல மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டார். அதைத் தொடர்ந்து போகர் சந்நிதியில் அமர்ந்து தியானம் செய்தார்.
அதன்பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, ''கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பாஜக ஆட்சியில் விலைவாசி ஏற்றம், வேலையின்மை உள்ளிட்ட காரணங்கள் காரணமாக, மக்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் நலனுக்காக பல்வேறு வாக்குறுதிகள் கூறி பிரசாரம் செய்தோம்.
தற்போது அதனால் தான் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால், பாஜக சார்பில் பிரதமர் மோடி பல இடங்களில் பிரசாரம் செய்தார். இந்தப் பிரசாரத்தின் போது ஊழலை ஒழிப்போம் என்றார். உண்மையில் இவர்கள் ஆட்சியில்தான் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, அதானிக்கு மோடி உதவியதன் மூலமே அவர் பல லட்சம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால், ராகுல்காந்தியின் பதவியை பறித்து வெளியே அனுப்பி உள்ளனர்.
மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வருத்தத்துக்கு உரிய சம்பவமாகும். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அளித்துள்ளார். மேலும் சம்பவத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆனால், இந்த கள்ளச்சாராயம் தமிழ்நாட்டிற்கு புதுச்சேரியில் இருந்துதான் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது மட்டுமல்ல கடந்த 1 1/2 ஆண்டுகளாக புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது. ஆனால், இதுபற்றி புதுச்சேரி முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது ஆட்சிக் காலத்தில் 400 மது விற்பனை நிலையங்கள் இருந்தன. தற்போது அது 900 விற்பனை நிலையங்களாக உயர்ந்துவிட்டது.