திண்டுக்கல்: பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை பூ மார்கெட்டில் ரூ 3.50 லட்சம் மதிப்பில் தயாரான டிரை புரூட் எனப்படும் உலர் பழங்களால் ஆன பிரமாண்ட மாலை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சுடலைமாடன் சாமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட்டுகளில் ஒன்றாகவும்.
நிலக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பூக்கள் சாகுபடி அதிகளவில் செய்யப்படுவதாலும், தமிழகத்தில் மல்லிகைப்பூ அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் ஏற்றுமதி மையமாகவும் இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், கனடா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குத் தினமும் 5-டன் பூக்களுக்குக் குறையாமல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி கோவா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான கிலோ பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் இங்கு வாசனை நிறைந்த மல்லிகைப்பூக்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், தற்போது நிலக்கோட்டையைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தோன்றியுள்ளது. இதனால் பூ பறிப்பது முதல், கட்டுவது, ஏற்றுமதி செய்வது வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் பல வகையான இலைகள், காய்கறிகள், பல வண்ண பூக்களில் பிரமாண்ட மாலைகள் என அடிக்கடி வித்தியாசமான முறையில் மாலைகள் கட்டுவதற்கான ஆர்டர்கள் குவிவது வழக்கம். இதனைத் தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை சுடலைமாடன் சாமிக்குப் பக்தர் ஒருவரால் நேற்றிக்கடனாக டிரைபுரூட் எனப்படும் உலர் பழங்களான மாலை, ஆர்டரின் பேரில் புது விதமாகத் தயார் செய்யப்பட்டது.