தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அபிராமி அம்மன் கோயில் தொடங்கி அமெரிக்கா வரை நான் செய்யும் பூட்டுதான்! - தொட்டி பூட்டு

திண்டுக்கல்: படிப்பறிவு இல்லாத நானே 120 வகையான பூட்டுகளை செய்கிறேன், நல்ல தொழில்நுட்பம் தெரிந்தால் அதை சரியாக பயன்படுத்தி, இதைவிட சிறப்பாக இன்னும் நிறைய புதுமையான பூட்டு தயாரிக்கலாம் என்று பூட்டு தயாரிப்பாளர் முருகேசன் தன்னம்பிக்கை வார்த்தையை விதைத்துள்ளார்.

lock
lock

By

Published : Sep 18, 2020, 5:24 AM IST

தமிழ்நாட்டில் பூட்டு என்றதும் நம் நினைவிற்கு வருவது திண்டுக்கல் தான். இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தேவைகளுக்கேற்ப பல விதமான வடிவங்களில் பூட்டுகள் செய்யப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர் அனுமந்த நகர் என்று பல ஊர்களில் பூட்டு தயாரிப்பு குடிசைத் தொழிலாக இருந்து வந்தது.

ஒரு காலத்தில் விவசாயம் இல்லாத ஊர் பஞ்சம் பிழைக்கக்கூட திண்டுக்கல் செல்லக்கூடாது என்ற வரலாற்று பேச்சும் உண்டு. கண்டுபிடிப்பு அவ்வளவு எளிதல்ல, மனிதனை மடைமாற்றும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. 1930ஆம் ஆண்டு சங்கரலிங்கம் என்ற ஆசாரி இரண்டு விதமான பூட்டுக்களை செய்ய ஆரம்பித்தார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து, நாகல் நகர், பெருமாள்பட்டி, நல்லாம்பட்டி ஆகிய பகுதிகளில் 250க்கும் அதிகமான பூட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரானது.

வறட்சியாக காணப்பட்ட திண்டுக்கல்லில் பணப்புழக்கம் ஏற்பட்டு, மக்களின் போக்குவரத்து வசதி அதிகரிக்கத் தொடங்கியது. 1945ஆம் ஆண்டுகளில் திண்டுக்கல் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டு என புகழ்பெறத் தொடங்கியது. பூட்டு தொழில் உச்சம் பெறத் தொடங்கிய போதே 1957ஆம் ஆண்டு பூட்டு தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது. 2013ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வேண்டி பூட்டு தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு திண்டுக்கல் மாவட்டத்தை கவுரவித்தது.

திண்டுக்கல் பூட்டு வகைகள்

மாங்காப் பூட்டு, சதுர பூட்டு, பெட்டிப் பூட்டு, கொத்துப் பூட்டு பார்ட்னர்ஷிப் பூட்டு (சாவிக் கொத்து), பெல் பூட்டு, மாஸ்டர் கீ பூட்டு, டபுள் லாக், சாவி புடிக்கிற பூட்டு, கோயில் பூட்டு என 24 வகையான பூட்டுகள் உள்ளன. தற்போது இந்த தொழில் நலிவடைந்தாலும் பாரம்பரியமாக சிலர் இதை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் தயாராகும் பூட்டுக்களே அதிகமாக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

அந்தவகையில், தொட்டி பூட்டு அதிகளவில் கோயில் பயன்பாடுகளுக்காக வாங்கப்படுகிறது. இந்த தொட்டி பூட்டு கதவின் பின்புறம் பொருத்தப்பட்டு அதிக எடை கொண்டு, சாவியோடு பொருத்தப்படும் பூட்டாகும். தொட்டி பூட்டு தயாரிக்கும் பணியினை திண்டுக்கல் ஆர்எம்டிசி காலனியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் செய்து வருகிறார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள கோயில்களுக்கும் இவர் செய்யும் தொட்டி பூட்டுக்கள் தான் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பூட்டு தயாரிக்கும் முருகேசன்

திண்டுக்கல் பூட்டுக்கள் இல்லத்தினை மட்டுமல்ல இறைவனையும் பாதுகாத்து வருகிறது. மதுரையை பூர்விகமாகக் கொண்ட முருகேசன் தனது பதினோராவது வயதிலிருந்தே பூட்டு தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை சிற்பியாக இருந்தபோது, அவர் செய்யும் சிற்பங்களை பாதுகாக்க பூட்டுக்களை செய்யத் தொடங்கினார்.

இதுகுறித்து முருகேசன் கூறுகையில், "எனக்கு சொந்த ஊர் மதுரை. திண்டுக்கல்லில் உள்ள பாட்டி வீட்டிற்கு தம்பியோடு வந்தபோது, படிப்பு ஏதுமில்லாததால், ஏதாவது ஒரு வேலையை கற்றுக்கொள்ள நானும் எனது தம்பியும் முடிவெடுத்தோம். அப்பதான் அங்கிருக்கும் பூட்டு பட்டறையில் சேர்ந்து சின்ன சின்ன வேலைகளை செய்ய தொடங்கினேன். பின்னாளில் வீட்டின் முன்பு சிறிய குடிசை அமைத்து கோயில் பூட்டும், என் தம்பி வீட்டுக்கு பயன்படுத்துகின்ற பூட்டும் செய்ய ஆரம்பித்தோம்.

கோயில்களுக்கு பூட்டு தயாரிப்பு

கோயில் பூட்டு

பொதுவாவே திண்டுக்கல் பூட்டு தான் எல்லா கோயிலுக்கும் வாங்கி செல்வார்கள். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக கோயிலுக்கு தொட்டி பூட்டு செய்து வருகிறேன். இத்தன வருடத்தில் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பதி பெருமாள் கோயில் என முக்கிய கோயில்கள் எல்லாத்துக்கும் நான் பூட்டு செய்து கொடுத்துள்ளேன்.

தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை...

இங்கு மட்டுமல்ல மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா இப்படி பல நாடுகளிலிருந்தும் கோயில் பூட்டு செய்ய ஆர்டர் கொடுப்பார்கள். இரண்டரை இன்ச் முதல் 24 இன்ச் வரை பூட்டு செய்துள்ளேன். இன்றைக்கு சைனா பூட்டு, அலிகார், காட்திரேஜ் (godrej) என எத்தனை ரகங்கள் வந்தாலும் திண்டுக்கல் பூட்டுக்கு நிகர் ஏதுமில்லை. ஆனால், தற்போது பூட்டு செய்யும் தொழில் தட்டுப்படவில்லை கரோனாவால் முடங்கிவிட்டது. கடந்த ஆறு மாத காலமாக வேலை ஏதுமில்லாமல் மிகவும் கடினமான சூழலை சந்தித்து வந்தேன்.

பாடப்புத்தகத்தில் பூட்டு தொழில்

அபிராமி அம்மன் கோயில் தொடங்கி அமெரிக்கா வரை

பொதுமுடக்கத்திற்கு முன்பே செய்யப்பட்ட ஆர்டர்கள் குறிப்பிட்ட தேதியில் அனுப்பமுடியாமல் போனது. இந்தச் சூழலில் மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலுக்கு 35 கிலோ எடையில் பூட்டு தயாரிக்கும் பணி முடிந்துவிட்டது. பேருந்து வசதி இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம். பாரம்பரியம் மிக்க பழமையான பூட்டு செய்கிற தங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். பூட்டு தொழில் குறித்து அரசு பாடத்தில் இடம்பெற்றால் மட்டுமே தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

பூட்டு தொழிலை கற்றுகொடுக்க தயார்

இன்றைய தலைமுறையினர் இதனை தெரிந்துகொண்டு நவீனத்தன்மையுடன் செயல்பட வைக்க ஏதுவாக அமையும். இந்த தொழிலை கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால், கற்றுக்கொள்ள எவரும் வருவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. படிப்பறிவு இல்லாத நானே 120 வகையான பூட்டு செய்கிறேன். நல்ல தொழில்நுட்பம் தெரிந்தால் அதை சரியாக பயன்படுத்தி, இதைவிட சிறப்பாக இன்னும் நிறைய புதுமையான பூட்டு தயாரிக்கலாம். அப்படி ஒரு மாற்றம் நிகழ்த்த விருப்பம் இருந்தால் என்னிடம் வாருங்கள்" என்றார்.

இதையும் படிங்க:டெல்லி கலவரம்; ஜே.என்.யூ., முன்னாள் மாணவர் உமர் காலித் கைது!

ABOUT THE AUTHOR

...view details