"கூட்டணியில் இருந்து வெளியே வந்ததில் நூறு மடங்கு மகிழ்ச்சி" - மாஜி அமைச்சர் சீனிவாசன் பேச்சு திண்டுக்கல்: அதிமுக கட்சியின் 52வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் பேகம்பூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், "பிஜேபி என்ற சைத்தான், கூட்டணியில் இருந்து வெளியே வந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். நாங்கள் நூறு மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொன்னால், அதேநேரம் கூட்டணியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார்.
நாங்கள் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக எடப்பாடி பழனிசாமி கூறி விட்டார். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என நாங்கள் கூறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், 10 பேர் இருக்கின்ற பாஜக கட்சியினர். அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை என கூறுகின்றனர்.
அதிமுகவால்தான் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. பாஜகவால் அதிமுக வளரவில்லை. பாஜக உடன் கூட்டணி வைத்தால்தான் தமிழகத்தில் வெற்றி கிடைக்கும் என்ற சூழ்நிலை எங்களுக்கு கிடையாது. இனி நாங்கள் செத்தாலும் பாஜக பக்கமோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ள யாருடனுமோ கூட்டணி வைக்க மாட்டோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: லியோ படம் வெற்றி பெற விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை!