திண்டுக்கல்: பழனி, நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ மண்டுகாளியம்மன் கோயிலில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்கு 1950ஆம் ஆண்டுக்கு முன்னதாக பெருமாள் சாமி நாயுடு என்பவர், 1.19 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தை தற்போது அவருடைய மகன் பெரிய ராமசாமி பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 1996ஆம் ஆண்டு இந்த நிலத்தில் உள்ள 30 சென்ட் நிலத்தை பெரிய ராமசாமி, ராமசுப்பு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், கோயிலுக்கு தானமாக கொடுத்த இடத்தை விற்பனை செய்ததால், 2013ஆம் ஆண்டு இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு, 2021ஆம் ஆண்டு தான பூமி நிலத்தை விற்பனை செய்தது செல்லாது என்றும், இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கோயில் நிலம் தங்களுக்கு வேண்டுமென, அவ்வூர் மக்கள் வருகிற 29ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கோயில் நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளனர்.
வேலி அமைப்பதைத் தடுக்க ஊர் மக்களோடு தலைமையேற்று வந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவரை, டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அசோக்குமார் பேசி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.