திண்டுக்கல்:தனியார் கல்லூரி தாளாளர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து அக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டது. மேலும் தலைமறைவான தாளாளரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
தாளாளர் மீது மூன்று மாணவிகள் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் 2 மாணவிகள் 18 வயதுக்குள்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனித்தனியாக போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 18 வயது நிரம்பிய மாணவி அளித்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 506/1 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சரணடைந்த தாளாளர்
இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள தாளாளரை கைது செய்ய ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், தாளாளரின் நெருங்கிய தொடர்பில் இருந்த சிலரை தாடிக்கொம்பு காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் இன்று (நவ. 23) குற்றஞ்சாட்டப்பட்ட தாளாளர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கடேசன் முன்பு சரணடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாளாளரை வருகின்ற 26ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காவல் துறையினர், தாளாளரை, வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் வைரலாகும் பாலியல் குற்றச்சாட்டு; அரசு பள்ளி ஆசிரியரை முற்றுகையிட்ட பெற்றோர்!