உடைந்த நிலையில் கதிர்நரசிங்கபெருமாள் கோயில் மதகு; வீணாகும் மழைநீர்! - திண்டுக்கலில் தொடர் மழை
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள் கோயில் கண்மாயில் மதகு உடைந்து மழைநீர் வெளியேறுவதால், மழைநீரைச் சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கதிர்நரசிங்கபெருமாள் கோயில் பின்புறம் கோயில் குளம் உள்ளது. சுமார் 102 ஏக்கர் நிலப்பரப்புளவு கொண்ட இந்தக் கண்மாயில் தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் மூலம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பாக கோயில் குளம் கண்மாயில் மதகு, கலிங்கு பழுதுபார்த்தல், வரத்து வாய்க்கால் தூர்வாருதல், கரையைப் பலப்படுத்தும் பணிக்காக ரூ.20.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
ஆனால் சிறு சாரல் மழைக்கே கண்மாயின் தென்புறம் உள்ள மதகு பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த மதகு சேதமடைந்து மூன்று மாதங்கள் ஆகியும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் மதகை இதுவரை சீர்செய்யவில்லை. இதனால் தண்ணீர் மதகு வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.