திண்டுக்கல்: அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்ச பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர், தான் வருமான வரி செலுத்துபவர் என்றும் மேலும் அரசு அதிகாரி என்பதால் தனக்கு மதுரை மத்திய சிறைச்சாலையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 12ஆம் தேதி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று (டிச. 15) நீதிபதி மோகனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் அனுராதா முதல் வகுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அங்கித் திவாரி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது போன்ற வழக்கில் முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று வாதாடினார்.
பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு சிறைச் சாலையில் முதல் வகுப்பு வழங்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சேலம் மனநல மருத்துவர் மீது தாக்குதல்: தமிழ்நாடு மனநல மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!