திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
நெகிழி தடை
கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் நெகிழிப் பொருள்களை உபயோகிப்பதற்கு பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழி தொடர்பாக 7 பொருள்களுக்கு நகரில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்று மற்றும் இரண்டு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் பகுதியில் உபயோகிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடைகளில் ஐந்து லிட்டர் குடிநீர் பாட்டில்கள்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களது தாகத்தை தீர்ப்பதற்கு ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் வரை குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 5 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் குடிநீர் ஏடிஎம்
குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றாக நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரம் அமைப்பதற்கு நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த இயந்திரங்களை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்று வரும் 15 இடங்களில் ஏடிஎம் அமைக்கப்படும் என்று நகராட்சி அறிவித்தது. இது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. சுமார் ஐந்து இடங்களில் இதற்கான பணிகள் தொடங்களப்பட்டு இன்னும் முடிக்கப்படாமலே உள்ளன.
தாமதமாகும் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மார்ச் மாதத்துக்கு பின்னர் கோடை சீசன் தொடங்கிவிடும். அப்போது, சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே நகராட்சி அறிவித்தபடி தானியங்கி குடிநீர் இயந்திரங்களை (ஏடிஎம்) இயந்திரங்களை உடனடியாக அமைத்து, சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் 51ஆவது புலிகள் காப்பகம் உருவானது!