திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்கு இ-பாஸ் முறையில் பல்வேறு தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு பேருந்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் கட்டாயமாக இ-பாஸ் எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்தார் .
இதனிடையே வார விடுமுறை நாள்கள் வர உள்ளதால் கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் முகப்பு பகுதியான வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து சொந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் 3 நாள்களுக்கு மேல் தங்கும் சுற்றுலா பயணிகள், சந்தேகத்திற்கு இடமான நபர்களுக்கு கரோனா பரிசோதனை எடுப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காத்திருக்கின்றனர். இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனை சாவடியில் சலசலப்பு நிலவுகிறது. தொடர்ந்து வாகனங்களின் அணி வகுப்பால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.