உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று கடந்த 30 நாள்களாக தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. இரண்டாம் கட்ட பரவல் நிலையை அடைந்திருக்கும் இதன் பரவலைத் தடுக்க முழுமையான ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு அனைத்து விதமான கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதன் காரணமாக, விவசாயத்திற்கான தேவையான உரம், பூச்சி மருந்து, இடுப்பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். தொடரும் ஊரடங்கால் உரக்கடைகள் அடைக்கப்பட்டு உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆங்காங்கே அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
வேளாண்குடி மக்களின் துயரத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனையடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் விவசாயிகளுக்கு தேவை விவசாய இடுப்பொருட்களை வழங்க முனைப்போடு செயலாற்றி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கொய்யா சாகுபடிக்கு பெயர்பெற்ற திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் வேளாண்துறை சார்பில் கொய்யா விவசாயிகளுக்கு வேண்டிய உரங்கள் உள்ளிட்ட இடுப்பொருட்கள் தோப்புகளுக்கே நேரில் சென்று விற்பனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வேளாண் அலுவலர் சுருளியப்பன் தலைமையில் ஆயக்குடி கொய்யா உற்பத்தியாளர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா ஊரடங்கு : வேளாண்துறை சார்பில் தோப்புகளுக்கே விற்பனை செய்யப்பட்ட இடுப்பொருட்கள்! கொய்யாச் செடிகளுக்கு வேண்டிய உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி போன்றவை கொய்யா தோப்புகள் இருக்கும் இடத்துக்கு வாகனங்கள் மூலம் நேரடியாக கொண்டுச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக வேளாண் அலுவலர் சுருளியப்பன் கூறுகையில், “விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு ஏற்படும் போது வேளாண்துறை அலுவலர்களை தயக்கமின்றி அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும்”, என்றார்.
சட்டப்பாறை, சித்தன்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரம், மருந்துகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க :கரோனா தாக்கம்: மதுரையில் மேலும் இரு பகுதிகளுக்கு 'சீல்'