ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்..!' - சுப.வீரபாண்டியன் - காரணம்

திண்டுக்கல்: பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு மிக முக்கிய காரணம் என்று, திண்டுக்கலில் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்
author img

By

Published : May 26, 2019, 12:10 PM IST

திண்டுக்கல்லில் நடைபெற்ற நூல் அறிமுகம் கருத்தரங்கு கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பங்கேற்றார். பின்னர் அவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "இந்த வெற்றி பாஜக பெற்ற வெற்றி என்பதைவிட எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திக் கொடுத்த வெற்றி என்றே கூறலாம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளாமல் யார் பிரதமர் என்றும், யார் தலைவர் என்கிற போட்டியில் மோடியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்.

தமிழகம், கேரளா பகுதிகளில் ராகுல்தான் பிரதமர் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறாமல் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கான மிக முக்கிய காரணமாகும். தங்களுக்கான பிரதமர் யார் என்று தெரியாமல் வாக்களிப்பதை விட பாஜகவின் ஒற்றை முகமாக விளங்கும் மோடிக்கு மக்கள் வாக்களித்து விட்டனர். எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் மக்கள் அவர்கள் மீதான நம்பிக்கை இழந்துள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் பாஜக இன்று தனி பெரும்பான்மையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது " என்றார்.

தேர்தலில் தோல்வி காரணமாகக் கூறி ராகுல் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவது குறித்த கேள்விக்கு, "தன்னுடைய தலைமையில் ஒரு தவறு நிகழும்போது அதற்கு தார்மீகப் பொறுப்பேற்பது சரியான செயல்தான். ஆனால், அதற்காக கட்சி பின்னடைவை சந்திக்கும்போது அதில் இருந்து விலகுவது சரியான முடிவல்ல. இதுபோன்ற சூழலை எதிர் கொண்டு முன்னேறுவதுதான் ஒரு நல்ல தலைமையின் கடமையாகும்" என்றார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவிற்கு கிடைத்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் உடனடியாக ஆட்சி கவிழ விட்டாலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிமுகவினரே தொடருவர் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. ஏனெனில் இந்த அரசு மெலிதான பெரும்பான்மையை கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக ஆட்சி மாற்றம் இல்லை என்றாலும் ஆட்சி மாற்றமே இல்லை என்று கூறமுடியாது. ஒரு கூட்டணி என்பது சித்தாந்தங்களின் அடிப்படையிலான ஒற்றுமை மூலமே வெற்றி காண்கிறது. அப்படியான சித்தாந்தங்கள் ஏதுமின்றி செல்லும் கூட்டணி ஒருபோதும் ஒற்றுமையோடு இருக்காது. காங்கிரஸ்-திமுக கூட்டணி சித்தாந்தங்களின் அடிப்படையிலான கூட்டணி என்பதால்தான் மக்கள் அதனை ஆதரித்துள்ளனர்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details