திண்டுக்கல் மாவட்டத்தில் 370 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர் விழா மேடையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், "திண்டுக்கல் அதிமுகவின் ஆணிவேர். எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து கட்சி தொடங்கி முதன்முதலில் தேர்தலைச் சந்தித்தது திண்டுக்கல் மண்ணில்தான். வீரமும் தியாகமும் நிறைந்த போர் பூமி திண்டுக்கல். இங்கு அரசுக் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என பல்வேறு கல்லூரிகள் உள்ளன.
ஆனால், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி என்ற கனவு இப்போது நனவாகியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியானது, அடுத்த கல்வியாண்டில் நிறைவு பெற்று, மாணவர்கள் கல்வி பயில உகந்த நிலையில் செயல்படும்" என்றார்.
இதையும் படிங்க:'காஷ்மீர் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பதில் உள்நோக்கம் இல்லை' - மத்திய இணை அமைச்சர்