திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் சிங் என்பவர் பானி பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடைக்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பானிபூரி சாப்பிட வந்தார். பானி பூரி சாப்பிட்டு விட்டு கூடுதலாக இன்னொரு பானி பூரி தருமாறு ராகுல் சிங்கிடம் கேட்டுள்ளார். அதற்கு ராகுல் சிங் மறுத்துள்ளார்.
அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. அதில் ராகுல் சிங் அவரை ஆபாசமாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுல் சிங்கை நெஞ்சு மற்றும் கைப்பகுதியில் குத்தியுள்ளார். அதன் பிறகு அந்த இளைஞர் அங்கு இருந்து தப்பி ஓடினார். கத்திக்குத்து காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட ராகுல் சிங் அந்த இளைஞரை துரத்திச் சென்று அவரை கல்லால் தாக்கினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வேடசந்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராகுல் சிங்கை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித்குமார் (26) என்பதும் அவர் மினுக்கம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.