வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இஸ்லாமியர்களின் போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இரவு, பகலாக இஸ்லாமியர்கள் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வண்ணாரப்பேட்டையில் திமுக கூட்டத்தில் பேச்சாளரான திண்டுக்கல் ஐ. லியோனி உரையாற்றினார். அவரது பேச்சுக்கு பின்னர்தான் அங்கு கலவரம் வெடித்தது. ஆதலால் திமுகவினர் வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளனர்” என்று குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, ”பாபர் மசூதி தீர்ப்பை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்களால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க முடியவில்லை. ஏனெனில் தங்கள் மார்க்கத்தை விடவும் இந்த மண்ணை இஸ்லாமியர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் என்றுதான் நான் கூறினேன். இயல்பாகவே ஒருவரின் உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்கள் கோபப்படுவார்கள். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவார்கள். இதில் தூண்டிவிட எதுவும் இல்லை. மனிதராய் பிறந்த யாராயினும் தங்களது உரிமைகள் பறிக்கப்படும்போது தானாக தன்னெழுச்சியாகப் போராடுவார்கள்.
திண்டுக்கல் லியோனி செய்தியாளர் சந்திப்பு அமைச்சர் ஜெயக்குமார் காவல் துறை மீதான தவறு என்ன என்பதைக் கூறுவதற்கு பதிலாக என் மீது தவறு என்று திசை திருப்ப பார்க்கிறார். ஆனால் இதில் உண்மையில்லை. அங்கிருந்த அத்தனை கேமராக்களிலும் நான் பேசியது பதிவாகியுள்ளது. எப்போதுமே ஜெயக்குமார் சம்பந்தம் இல்லாத வகையில் கருத்து தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா இருந்த காலத்தில் இவர்களது கருத்துகள் எல்லாம் எங்கே போனது. எனது கருத்துதான் கலவரத்திற்கு காரணம் என்பது முற்றிலும் தவறானது. இதனை முழுமையாக மறுக்கிறேன். இருப்பினும் என் மீது வழக்கு பதியப்பட்டால் அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன்” என்றார்.