திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதி விவசாயிகள் அவரை, பட்டர் பீன்ஸ் பயிர்களை அதிகமாக விளைவிக்கின்றனர். இவை இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் காய்கறி சந்தையில் நல்ல விலை கிடைத்துவந்தது. ஆனால் தற்பொழுது பட்டர் பீன்ஸ் இலையில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் மலை கிராம விவசாயிகள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை அடைகின்றனர்.
மஞ்சள் நோய் தாக்குதலால் பட்டர் பீன்ஸ் விளைச்சல் கடும் பாதிப்பு - பட்டர் பீன்ஸ் சாகுபடி
திண்டுக்கல்: மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக பட்டர் பீன்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய விவசாயிகள், "மஞ்சள் நோயின் தாக்கததால் ஒரு அடி நீளம் வளர வேண்டிய காய் அரை இஞ்ச் அளவிற்கு சுருங்கியதால் விளைச்சலின்றி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உடனடியாக மஞ்சள் நோயை கட்டுப்படுத்த அரசு உரிய மருந்து முறைகளை இயற்கை முறையில் விவசாயம் செய்யும் மலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
அதே சமயம் முன்னதாக கிலோ 120க்கு விற்ற பட்டர் பீன்ஸ் தற்போது 60 ரூபாய்க்கே விற்பனையாகிறது. இந்த விலை எடுப்பு கூலிக்குகூட கட்டாது. இதனால் பட்டர் பீன்ஸ்களை பறித்தாலும் கீழே கொட்டும் நிலையே உருவாகியுள்ளது. எனவே உரிய வருமானமின்றி தவிக்கும் எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.