உலக அளவில் நினைவுக்கூரப்படும் மற்ற நாள்களுக்கும் சிட்டுக்குருவிகள் நாளுக்கும் வேறுபாடு இருக்கிறது. மற்ற நாள்கள் மனிதர்களுக்கு வரலாற்றை சொல்கிறது, ஆனால் உலக சிட்டுக்குருவிகள் நாளோ பல்லுயிர் சூழலை, அந்தச் சூழலின் அங்கமான மனித இனம் உணர வேண்டுமென போதிக்கிறது. அதென்னப் பல்லுயிர் சூழல் என்ற கேள்வி எழுகிறதா?
ஓருயிர் அமீபா முதல் பாசி, புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, மனிதகுலம் என இவை யாவும் ஒருங்கே வாழும் சூழல் தான் பல்லுயிர் சூழல். இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல. ஒன்றில்லை என்றால் மற்றொன்று வாழும் நிலையை இழக்கும் என்பதே நிகழ்வுண்மை!
இதற்கு இயற்கை வாழ்வியல் ஆசான் நம்மாழ்வார் ஒரு முறை சொன்ன உண்மைச் சம்பவத்தை இங்கே நினைவுப்படுத்துவது பொறுத்தமாக இருக்கும்...
சீன தேசத்தில் விளைச்சல் குறைந்து வறட்சியில் வாடிய வேளாண் தொழிலாளர்கள், தமது விளைச்சல்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காக்கை, பருந்து, காட்டுப்பன்றி உள்பட நான்கு உயிரினங்களை அழிக்க வேண்டுமென மாவோவிடம் கோரிக்கை வைக்கின்றனர். அவரும் வேளாண் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று Four pests campaign என்ற பெயரில் தமது படையை அனுப்பி 4 வகை உயிரினங்களை அழிக்க ஆணையிடுகிறார். அந்த பட்டியலில் சின்னஞ்சிறியப் பறவையானச் சிட்டுக் குருவியும் இடம் பிடிக்கிறது.
சின்னஞ்சிறியப் பறவைகள் கொலை செய்யப்படுமளவுக்கு என்ன தவறு செய்தன?. விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றது தான் அவை செய்த தவறு என தீர்ப்பளிக்கப்பட்டதோ?.
மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக்குருவிகளை அழிக்க பெரும் படை கிளம்பியது. எந்த விதமான இரக்கமும் காட்டாமல் கண்ணில்பட்ட அனைத்தும் கொன்று குவிக்கப்பட்டன. அதன் கூடுகள், கூடுகளில் குருவிகளிட்ட முட்டைகள், குருவிக் குஞ்சுகள் என அனைத்தையும் கொன்று குவித்து மனித இனத்தின் அத்தனை விதமான இழிப் புத்தியையும் காட்டியது அந்தப் படை.
சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; வேளாண்மை செழிக்கும், உணவு உற்பத்தி பெருகும், நாடு வளருமென பொய்யானச் செய்தியைச் சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். அதனால் கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள் அழிந்து போயின.